புதுடெல்லி: இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக் கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாருக்குச் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
டெல்லியின் சரஸ்வதி விகார் பகுதியில் 1984 நவம்பர் மாதம் தந்தை - மகன் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.
இந்நிலையில், “நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதற்காக மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்,” என்று சீக்கியத் தலைவர் குர்லாத் சிங் தெரிவித்துள்ளார்.
சஜ்ஜன் குமார் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சீக்கியர்களின் சொத்துகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சஜ்ஜன் குமார்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அப்போது, வீட்டிலிருந்த தம் கணவரையும் மகனையும் அடித்துக் கொன்ற வன்முறைக் கும்பல், வீட்டிலிருந்த பொருள்களைச் சூறையாடி, வீட்டிற்குத் தீவைத்ததாக ஜஸ்வந்த் என்பவரின் மனைவி புகார் அளித்திருந்தார். அத்துடன், வீட்டிலிருந்த மூன்று பெண்களையும் வன்முறைக் கும்பல் தாக்கியதாகச் சொல்லப்பட்டது.
அக்கொலைகளைத் திட்டமிட்டு அரங்கேற்றியதில் சஜ்ஜன் குமாருக்குத் தொடர்புள்ளதாகக் கூறி, அவரைக் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
தொடர்புடைய செய்திகள்
கொலையில் முடிந்த இன்னொரு கலவர வழக்கில் தொடர்பிருந்ததற்காக சஜ்ஜன் குமார் ஏற்கெனவே ஆயுள் தண்டனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.