இந்தியா, சிங்கப்பூர் இடையேயான 19வது வெளியுறவு அலுவலக ஆலோசனைக் கூட்டம்

இந்தியா, சிங்கப்பூர் இடையேயான 19வது வெளியுறவு அலுவலக ஆலோசனைக் கூட்டம்

படம்: நியூஸ் ஆன் ஏர்

07 Aug 2026 - 6:22 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியா, சிங்கப்பூர் இடையேயான உத்திபூர்வ பங்காளித்துவ வளர்ச்சி, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் 19வது வெளியுறவு அலுவலக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் (கிழக்கு) ருத்ரேந்திர டாண்டன், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் (கொள்கை) லூக் கோ (Luke Goh) ஆகிய இருவரும் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

இந்தக் கூட்டத்தின்போது அனைத்துலக, வட்டார அளவிலான சவால்களை எதிர்கொள்ள ஆசியான் அமைப்பு உட்பட பல்வேறு உலகளாவிய அமைப்புகளுடன் இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து இருதரப்பும் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தின.

மேலும், பொருளியல் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, மின்னிலக்கமயமாக்கல், நிலையான வளர்ச்சி, தகவல் தொடர்பு வசதிகள், சுகாதாரம்-மருத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட எட்டு முக்கியத் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர் பயணத்தின்போது இருதரப்பு உறவுகள் ‘விரிவான உத்திபூர்வ கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்தப்பட்டன.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டபோது இதற்கான அதிகாரபூர்வ வழிகாட்டி வரைபடம் வெளியிடப்பட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர்நரேந்திர மோடிசுகாதாரம்மருத்துவம்மின்னிலக்கம்பொருளியல்முன்னேற்றம்பங்காளித்துவம்வளர்ச்சி