தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சத்தீஸ்கர் துப்பாக்கிச் சண்டையில் 31 மாவோயிஸ்டுகள், 2 வீரர்கள் சுட்டுக்கொலை

2 mins read
db7ca18c-681c-4778-8567-6420b714c4a6
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 80க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  - படம்: இந்திய ஊடகம்

பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 31 மாவோயிஸ்டுகளும் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அந்த மாவட்டத்தில் உள்ள இந்திரவதி தேசிய பூங்காவில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையொட்டி, பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது, ஒளிந்திருந்த மாவோயிஸ்டு குழுவினர் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட்டனர். பதிலுக்கு படைவீரர்களும் சுட்டதில் துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்தது.

ஒருவழியாக, சண்டை ஓய்ந்த பின்னர், மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த 31 பேரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் சுடப்பட்டு மாண்டு கிடந்தனர்.

மேலும், இரு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதே இந்திரவதி தேசிய பூங்காவில் ஜனவரி 12ஆம் தேதி மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2,799 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் அந்தப் பூங்கா, மகாராஷ்டிர மாநில எல்லையை ஒட்டி உள்ளது. 1983ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புப் பகுதியாக அந்த வட்டாரம் அறிவிக்கப்பட்டது.

அதனால், பொதுமக்கள் அந்தப் பகுதியை நெருங்குவதில்லை. அதனைப் பயன்படுத்தி, அந்தப் பூங்காவை பதுங்கும் இடமாக மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி வந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 80க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை ஒழிக்கும் முயற்சியில் தாக்குதலில் ஈடுபட்ட 11 பாதுகாப்புப் படைவீரர்களும் தங்கள் உயிரை இழந்துவிட்டனர்.

மேலும், அந்த மாநிலத்தில் இவ்வாண்டு பொதுமக்களில் ஒன்பது பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள் அனைவரும் 2026ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்