அமெரிக்க முற்றுகையைத் தாண்டி இந்தியா வரும் 2 எல்பிஜி கப்பல்கள்

அமெரிக்க முற்றுகையைத் தாண்டி இந்தியா வரும் 2 எல்பிஜி கப்பல்கள்

2 mins read
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டதாக இந்திய பெட்ரோலிய அமைச்சு உறுதி
0ce8f824-50f4-40ee-b285-5e986f9cdc4d
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 13 வர்த்தகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்தடைந்துள்ளன.  - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: மத்திய கிழக்கில் கடுமையான போர்ச் சூழலும் பதற்றமும் நிலவி வரும் நிலையிலும், அதைக் கடந்து ‘சைமி’, ‘என்.வி. சன்ஷைன்’ ஆகிய இரண்டு இந்தியச் சமையல் எரிவாயு (எல்பிஜி) சரக்குக் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் இடையே தீவிரப் போர் நடைபெற்று வந்தது.

தற்போது பாகிஸ்தானின் சமரச முயற்சி காரணமாக தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இந்தச் சூழலில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் அங்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது.

இதற்கிடையே, ஈரானின் துறைமுகங்களை முடக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் 13 முதல் அமெரிக்கக் கடற்படை இப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் தனது பாதுகாப்பை அங்கு பலப்படுத்தியுள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய், எரிவாயுக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது.

அந்தவகையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 13 வர்த்தகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்தடைந்துள்ளன.

தற்போது வந்து கொண்டிருக்கும் இரண்டு கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டதாக இந்தியப் பெட்ரோலிய அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை

இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், “இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களுக்கு மட்டுமே ஈரான் அனுமதி வழங்கும்.

“அவ்வாறு செல்லும் கப்பல்கள், ஈரானியக் கடற்படையின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும். இதை மீறிச் செயல்படும் கப்பல்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,” என எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்