சண்டிகர்: பஞ்சாபில் அனைத்துலக எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்டத்தில் அனைத்துலக எல்லைப்பகுதியில் நேற்று இரவு 8.48 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 ஊடுருவல்காரர்கள் நடமாட்டம் இருந்துள்ளது.
இதனை கண்டறிந்த இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர்.
இருப்பினும், அவர்கள் கண்டுகொள்ளாமல், ஊடுருவ முயன்றனர்.
இதனையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒரு கிலோ எடை கொண்ட 4 ஹெராயின் பாக்கெட்டுகள், ஏகே-47 ரக துப்பாக்கி, 9 எம்.எம். பிஸ்டல், கைபேசி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

