புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒருவரின் வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இன்னொரு வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணும் ஒரே எண்ணாக உள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் மூலம் போலி வாக்காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.
அதில், வெவ்வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்கள், இரண்டு பேருக்கு ஒன்று போல் இருக்கலாம். ஆனால், அவரவர் மாநிலங்களில் உள்ள தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் மட்டும்தான் அவர்களால் வாக்களிக்க முடியும்.
இரண்டு பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தாலும், அவர்களை போலி வாக்காளர்கள் என்றோ அல்லது நகல் வாக்காளர்கள் என்றோ கருதுவதற்கில்லை.
அவர்களால் அவர்களுடைய சொந்தத் தொகுதியில் மட்டுமே வாக்களிக்க முடியும். எனினும் இதுபோன்று இரண்டு பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் வருவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

