குப்வாரா: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் கொன்றுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை (அக்டோபர் 5) காலை தெரிவித்தது.
‘குகல்தர்’ (GUGALDHAR) பாதுகாப்பு நடவடிக்கையின்போது அவ்விருவரும் குப்வாரா நகரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
“தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ‘குகல்தர்’ பாதுகாப்பு நடவடிக்கையில் அந்த பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் கொன்றனர். போரில் பயன்படுத்தக்கூடியது போன்ற பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் தேடல் பணிகள் தொடர்கின்றன,” என்று அறிக்கை ஒன்றில் இந்திய ராணுவம் குறிப்பிட்டது.
சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் தென்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுடன் மோதியதாகவும் ராணுவம் விவரித்தது. அதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக ராணுவம் தெரிவித்தது.
குப்வாராவில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினிர் முறியடித்தனர் என்று இந்திய ராணுவம், சனிக்கிழமையன்று முன்னதாகத் தெரிவித்திருந்தது. பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்ட பிறகும் ராணுவ வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட கூட்டுப் படை தொடர்ந்து ‘குகல்தர்’ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) குப்வாரா எல்லைக் கோட்டுப் பகுதியில் நிகழ்ந்த சுரங்க வெடிப்பில் ராணுவ வீரர்கள் இருவர் காயமுற்றனர்.