காந்தி நகர்: இங்கிலாந்தில் குடியேற உதவுவதாக வாக்குறுதியளித்து, பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ. 20.46 லட்சத்தைப் பெற்றுகொண்டு ஏமாற்றிய நபரைக் காவல்துறை தேடி வருகிறது.
குஜராத்தின் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பங்கஜ் படேல் தானியங்கி மோட்டார் வாகனம் தொடர்பான தொழில் செய்து வருகிறார்.
அவரையும் அவரது மனைவியையும் சந்திக்க வந்த அவர்களின் உறவினரான தொழில் அதிபர் ஹஸ்முக் படேல் இருவரையும் இங்கிலாந்தில் குடியேற உதவுவதாகப் பொய்யான வாக்குறுதி அளித்தார்.
மேலும், இங்கிலாந்து சென்றால் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை வார்த்தைகள் கூறினார் ஹஸ்முக் படேல்.
அதை நம்பிய அத்தம்பதியர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும்படி அவரிடம் கூறினர்.
ரூ. 32 லட்சம் பணம் கொடுத்தால் இருவரையும் லண்டனுக்கு அனுப்பி வைப்பதாக அவர் உறுதியளித்தார்.
முழுமையாக அத்தொகையைக் கொடுக்க முடியவில்லை என்றாலும் சிறுசிறு தொகையாகப் பிரித்து மாதாமாதம் தனது வங்கி கணக்கில் செலுத்தும்படி ஹஸ்முக் படேல் சொன்னார்.
அவருடைய வாக்குறுதியை ஏற்று 2022 ஜூலை மாதம் தொடங்கி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை கிட்டத்தட்ட 12.5 லட்சம் ரூபாய் பணம் செலுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
விசாவிற்கான ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்ட அவர், குடியேறுவது தொடர்பான வேலையை முடிப்பதற்காக லண்டன் செல்வதாகக் கூறினார்.
அங்கு சென்ற அவரிடமிருந்து அத்தம்பதியருக்கு சாதமாக எந்த பதிலும் வராததால், பணத்தைத் திருப்பி கேட்டனர்.
இதனால் உறவினர் மேலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து சில போலி ஆவணங்களைக் காட்டி மேலும் ரூ. 7.5 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு அத்தம்பதியர் உடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்தார்.
உறவினரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து தம்பதியர் மனம் உடைந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த மோசடி ஆசாமியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

