அமராவதி: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநில மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
அங்குள்ள காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா என்ற பகுதியில் இயங்கி வந்த அந்தப் பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். சனிக்கிழமை (பிப்ரவரி 28) காலை இவர்களில் பெரும்பாலானோர் பணிக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், அன்று பிற்பகல் 2 மணியளவில் பட்டாசு ஆலையில் பயங்கரச் சத்தம் கேட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர்.
எனினும், வெடிவிபத்தில் மூண்ட தீ வேகமாகப் பரவியதால் தொழிலாளர்களில் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி மாண்டுபோயினர். படுகாயமடைந்த பத்து பேர் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு உடலில் 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மீட்புப் பணியில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளும் பயன்படுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்தது. சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறினால் எத்தகைய தாக்கம் இருக்குமோ, அதுபோன்ற மோசமான காட்சியைக் காண முடிவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களின் உடற்பாகங்கள் அருகே உள்ள வயல்வெளியிலும் காலி மனைகளிலும் சிதறிக் கிடக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இத்துயரச் சம்பவம் காரணமாக ஆந்திர மக்கள் சோகத்தில் உள்ளனர்.
பட்டாசு தயாரிப்புக்கான வேதிக்கலவையின்போது ஏற்பட்ட உராய்வு அல்லது மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வெடிச்சத்தம் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை எதிரொலித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
“மீட்புப் பணிகள் நீடிக்கின்றன. நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். உயரதிகாரிகளை விபத்துப் பகுதிக்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.

