அமராவதி: கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் மர்ம நோயின் தாக்கத்தால் 30 பேர் உயிரிழந்துவிட்டது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குண்டூரில் மருத்துவ முகாம்களைப் பரவலாக நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நிலைமையின் தீவிரம் கருதி, குண்டூர் மாவட்டம், துரகபாலம் கிராமத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதை அடுத்து, அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“நோயால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வார இறுதி நாள்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அந்தக் கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி, தேவையான மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும்,” என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இந்நிலையில், மர்ம நோயால் வேறு யாரும் புதிதாகப் பாதிக்கப்படவில்லை என்றும் நிலைமை கவனிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆந்திர அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல், நிமோனியா, தோல் ஒவ்வாமையைப் பரப்பும் ‘மெலியோய்டோசிஸ் வைரஸ்’ பரவலே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவு வந்த பிறகே, உண்மையான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசின் அலட்சியப் போக்கே 20 பேர் உயிரிழக்கக் காரணம் என ஆந்திர எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்பதி ராம்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.