போபால்: தலித் ஆடவர் ஒருவர் தன் கைகளால் வழங்கிய பிரசாதத்தை வாங்கி உண்டதால், கிட்டத்தட்ட 20 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து, சத்தர்பூர் மாவட்டம், அத்ரார் எனும் கிராமத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பங்கள் காவல்துறைக் கண்காணிப்பாளர் அகம் ஜெயினைச் சந்தித்து, ஊராட்சித் தலைவரின் உத்தரவு குறித்து முறையிட்டனர்.
இருதரப்பினரும் புகார் அளித்துள்ளதாகவும் உயரதிகாரிகள் அவற்றை விசாரித்து வருவதாகவும் திரு ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஜெகத் அகிர்வார் என்ற ஆடவர் தமது விருப்பம் நிறைவேறியதை அடுத்து, கடந்த 2024 ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று தம் ஊரிலுள்ள அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பிரசாதமாக லட்டு வழங்கினார்.
அந்த லட்டை உயர்குடியினர் உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 பேர் பகிர்ந்து உண்டனர்.
அதுபற்றிய தகவல் பரவியதும், லட்டு தின்றவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் ஊரைவிட்டுத் தள்ளிவைப்பதாக ஊராட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் காரணமாக, ஊரில் நடக்கும் திருமணங்களிலும் மற்ற நிகழ்வுகளிலும் அந்த 20 குடும்பத்தினரும் புறக்கணிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல்துறை இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்துவைத்தபோதும் இன்னும் அங்கு நிலைமை பதற்றமாகவே உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இப்போதைய ஊராட்சித் தலைவருக்கும் முன்னாள் தலைவருக்கும் இடையிலான சண்டையும் இப்பிரச்சினைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் சிலர் கூறுகின்றனர்.