புதுடெல்லி: துபாய் செல்ல வேண்டிய இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் 20 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால், ஆத்திரமடைந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளைச் சமாதானப்படுத்த விமான நிலைய ஊழியர்கள் யாரும் உடனடியாக வரவில்லை எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து ‘எஸ்ஜி 5111’, ‘எஸ்ஜி 5105’ ஆகிய இரு அனைத்துலக ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் துபாய் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரு விமானங்களின் புறப்பாடு பலமுறை மாற்றி அமைக்கப்பட்டது. ஒரு விமானம் 29 மணிநேரமும், மற்றொரு விமானம் 19 மணிநேரமும் தாமதமானதால் பயணிகள் பொறுமை இழந்தனர்.
தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்படாததால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள் பலர், விமான நிலையத்திலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது பயணக் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தருமாறு சிலர் முழக்கமிட்டனர்.
விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக வராத நிலையில், விமான நிலையப் பாதுகாப்புத்துறையினரும் பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்களும் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பயணிகளுக்குத் தேவையான தற்காலிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானங்கள் தாமதமானதாகவும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
