புதுடெல்லி: இந்திய அரசாங்கம் எடுத்த தீவிர முயற்சியின் விளைவாக, ரஷ்ய ராணுவத்திலிருந்து இதுவரை குறைந்தது 85 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) தெரிவித்தது.
இன்னும் 20 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
ஆயினும், அவர்களைக் கூடிய விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் சொன்னார்.
‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் கஸான் நகருக்குச் செல்லவிருக்கிறார். 16ஆவது ‘பிரிக்ஸ்’ மாநாடு அக்டோபர் 22, 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
அதனையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது திரு மிஸ்ரி இந்த விவரங்களை வெளியிட்டார்.
“ரஷ்ய ராணுவத்தில் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிப்பது குறித்து, இந்தியத் தூதரக அதிகாரிகள், ரஷ்ய வெளியுறவு அமைச்சு மற்றும் தற்காப்பு அமைச்சு அதிகாரிகளுடன் அணுக்கத் தொடர்பில் உள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடியே ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேசியுள்ளார்,” என்று திரு மிஸ்ரி தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரேன் போரின்போது மாண்ட சில இந்தியர்களின் உடல்களும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டதாக அவர் சொன்னார்.

