ராய்ப்பூர்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 3) நக்சலைட்டுகள் 20 பேர் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
அவர்களின் 11 பேரின் தலைக்கு மொத்தம் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த 20 பேரில் ஒன்பது பேர் பெண்கள்.
அவர்களில் ஒருவர், மாவோயிஸ்ட் கட்டமைப்பில் வலுவானதாகக் கருதப்படும் மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்தவர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சரணடைந்த அனைவர்க்கும் ஆளுக்கு ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கக் கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறினார்.
மாவோயிஸ்ட்டுகள் வன்முறையைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அவர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன், மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, தற்சார்பு வாழ்க்கை மற்றும் பிற வசதிகள் செய்து தரப்படும் என்றும் திரு சவான் தெரிவித்தார்.
இதனிடையே, நக்சல்கள் அனைவரும் சரணடையும் வரை, பிடிபடும் வரை அல்லது அழிக்கப்படும் வரை இந்திய அரசாங்கம் ஓயாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சத்தீஸ்கர் மாநிலம், காரகுட்டா மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக ‘ஆப்பரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ எனும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர், மாவட்ட ரிசர்வ் காவல்படையினர், சத்தீஸ்கர் காவல்துறையினர், ‘கோப்ரா’ படைப்பிரிவு வீரர்கள் ஆகியோரைப் பாராட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட அமைச்சர் அமித்ஷா, வரும் 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.