கட்டாக்: திருட்டுக் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்குப் பல நிபந்தனைகளின்கீழ் இந்தியாவின் ஒடிசா மாநில உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்த மானஸ் அதி என்ற அவர், தமது சிற்றூரைச் சுற்றி 200 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை ஈராண்டுகளுக்குப் பேணி வளர்க்க வேண்டும் என்பது அந்நிபந்தனைகளில் ஒன்று.
மின்பகிர்மான நிறுவனம் ஒன்றிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஆறு மின்கம்பங்களைக் களவாடியதாக 2024 டிசம்பர் 25ஆம் தேதி மானஸ் கைதுசெய்யப்பட்டார்.
அக்குற்றச்செயலில் அவரது கூட்டாளிக்கு ஏற்கெனவே பிணை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மானசையும் சில நிபந்தனைகளின்பேரில் பிணையில் விடுவிக்கும்படி கீழ்நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இரு வாரங்களுக்கு ஒருமுறை காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் பிணையில் வெளியில் இருக்கும்போது சாட்சிகளை அழிக்கும் செயலிலோ அல்லது வேறு குற்றங்களிலோ ஈடுபடக்கூடாது என்றும் மானசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“மா, வேம்பு, புளி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை மானஸ் தமது ஊரிலுள்ள அரசு அல்லது சமூக அல்லது தனியார் நிலங்களில் நட்டு வளர்க்க வேண்டும்,” என உத்தரவிட்ட நீதிமன்றம், அப்பணிகளில் உள்ளூர்க் காவல்துறை, வன, வருவாய்த்துறை அதிகாரிகள் அவருக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் மானசுக்கு வழங்கப்பட்ட பிணை ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.