தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்தக் கறை உட்பட 200 சாட்சியங்கள்; கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2 mins read
08f80af7-71a0-43a9-b6f5-0468d53807f4
நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. - கோப்புப் படம்:இந்திய ஊடகம்

பெங்களூரு: ரசிகர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ரத்தக்கறை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரசிகரான ரேணுகாசுவாமி, கொலை வழக்கில் கன்னட நடிகரான தர்ஷனும் அவரது தோழி பவித்ரா கவுடாவும் கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது பெங்களூரு காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

மொத்தம் 3,991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பெங்களூரு கீழமை நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 4) காவல்துறை தாக்கல் செய்தது.

ரேணுகாசுவாமியின் கைப்பேசியில் பதிவான காணொளியும் சாட்சியங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்தக் காணொளியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் தன்னை அடிக்க வேண்டாம் என்று ரேணுகாசுவாமி கெஞ்சுவதாக உள்ளது.

ஆட்டோ ஓட்டுநரான 33 வயது ரேணுகாசுவாமி கடந்த ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலத்திற்குக் கீழே பிணமாகக் கிடந்தார்.

நடிகர் தர்ஷனின் உத்தரவால் ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகத்தில் நடிகரின் தோழி பவித்ரா கவுடாவைப் பாதிக்கும் காணொளியை ரேணுகாசுவாமி பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.

ரேணுகாசுவாமி கொடூரமாக அடித்து, மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. ஒரு காது காணவில்லை.

அவரது விதைப்பை சேதப்படுத்தப்பட்டிருந்தது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்