புதுடெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் அதன் தலைவர் அனில் அம்பானியும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை மோசடி நிறுவனமாக கடந்த ஜூன் 13ஆம் தேதி எஸ்பிஐ வங்கி அறிவித்தது.
இதுகுறித்த எழுத்துப்பூர்வ தகவலை ஜூன் 24ஆம் தேதி ரிசர்வ் வங்கிக்குத் தெரிவித்த அந்த வங்கி, அடுத்த நடவடிக்கையாக சிபிஐயிடம் புகார் அளித்தது.
அதனைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அந்த நிறுவனத்துக்கும் அதன் இயக்குநர் அனில் அம்பானிக்கும் சொந்தமான இடங்களில் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தியது.
மும்பையில் அனில் அம்பானிக்குச் சொந்தமான ஆறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வங்கியில் கடனாகப் பெறப்பட்ட நிதி எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் கடன்கள் திசைதிருப்பப்பட்டனவா என்பவற்றை அறிய முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னிலக்க ஆதாரங்களைச் சேகரிக்க இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
ரூ.2,000 கோடிக்கு மேல் எஸ்பிஐ வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.