புதுடெல்லி: ஏறக்குறைய 2,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த முறை ஆம்ஆத்மியின் ஆட்சியின்போது 12,748 வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2,000 கோடி அளவில் ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கட்டுமான ஒப்பந்தங்கள் ஆம்ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. செலவினங்களை அதிகரிப்பதற்காக எந்த வகுப்பறைகளும் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். டெல்லி முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீதும் வழக்குப்பதிவானது.
ஏற்கெனவே, டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சத்யேந்திர ஜெயின் பணமோசடி வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஆனால் இருவர்மீதும் பதியப்பட்ட வழக்குகள் சட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களையும் ஆய்வு செய்ய பாரதிய ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.