புதுடெல்லி: மதுபானக் கொள்கையால் டெல்லி அரசாங்கத்துக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆம் ஆத்மி கட்சிமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையை டெல்லி சட்டமன்றத்தில் முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்.
அதில், குறிப்பிட்ட சில பகுதிகளில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படாததால் ரூ.941.53 கோடி; உரிமம் திருப்பி அளிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோராததால் ரூ.890.15 கோடி; கோவிட் காரணம் காட்டி, கட்டணத்தை தள்ளுபடி செய்ததால் ரூ.144 கோடி; ஜோனல் உரிமம் வழங்குவதற்கு பாதுகாப்புக் கட்டணத்தை முறையாக வசூலிக்காததால் ரூ.27 கோடி என மொத்தம் ரூ.2,002.68 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறும்போது, 2017-2018க்குப் பிறகு சிஏஜி அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. முந்தைய ஆம் ஆத்மி அரசு அரசியல் அமைப்பை மீறியுள்ளது என்று தெரிவித்தார்.
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தபோது 2021 நவம்பர் 17ஆம் தேதி புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி துணை ஆளுநர் அதை ரத்து செய்தார்.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி பிணையில் விடுதலை ஆனார்கள். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

