புதுடெல்லி: பொதுமக்களிடம் இன்னும் ரூ.6,471 கோடி (S$995.5 மில்லியன்) மதிப்புள்ள 2,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2023 மே 19ஆம் தேதிமுதல் 2,000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, வங்கிகள் இதுவரை 98.18 விழுக்காடு 2,000 ரூபாய் தாள்களைத் திரும்பப் பெற்றுள்ளன. அதாவது, 2023 மே 19ஆம் தேதியன்று, 3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்த நிலையில், இப்போது அது ரூ.6,471 கோடியாகக் குறைந்துள்ளது.
2023 அக்டோபர்வரை அப்பணத்தாள்களை எல்லா வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ரிசர்வ் வங்கியின் 19 வழங்கல் அலுவலகங்களில் மட்டும் அவற்றை மாற்றிக்கொள்ள முடிகிறது.
மேலும், அஞ்சல் நிலையங்கள் வழியாகவும் அவற்றை ரிசர்வ் வங்கி வழங்கல் அலுவலகங்களுக்கு 2,000 ரூபாய் தாள்களை அனுப்பி, பொதுமக்கள் அவற்றைத் தங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கக் கோரலாம்.
இப்போதும் 2,000 ரூபாய் தாள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.