தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.6,970 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திருப்பித் தரப்படவில்லை

2 mins read
0f7184e4-2f5f-44d6-aba8-6c1139f14189
மீட்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மும்பை: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 2 விழுக்காடு, அதாவது ரூ.6,970 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளிடம் மாற்றிக்கொள்ளப்படவில்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, எஞ்சிய 98 விழுக்காட்டு நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கட்கிழமை (நவம்பர் 4) கூறியது.

கடந்த ஆண்டு ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த நிலையில், 2023 மே மாதம் அவற்றைப் புழக்கத்தில் இருந்து மீட்டுக்கொள்வதாக ஆர்பிஐ அறிவித்து இருந்தது.

வங்கிகளில் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள 2023 அக்டோபர் 7ஆம் தேதி வரை காலக்கெடு தரப்பட்டது.

அதன்பிறகு 2023 அக்டோபர் 9ஆம் தேதியிலிருந்து அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட 19 ஆா்பிஐ கிளை அலுவலகங்களில் மட்டுமே நடப்பில் இருந்தது.

தங்கள் கையிருப்பில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளைப் பொதுமக்கள் அஞ்சல் வழியாக நாட்டிலுள்ள எந்த ஒரு தபால் நிலையத்தின் மூலமாகவும் அதை ஆா்பிஐ கிளை அலுவலகங்களுக்கு அனுப்பலாம். அதை ஆா்பிஐ சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக மாற்றிவிடுகிறது.

2016 நவம்பா் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

அதனைத் தொடா்ந்து, 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் கண்டது. பின்னர், காரணம் கூறப்படாமல் அந்த நோட்டுக்கும் விடை அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்