புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பொய்ச் செய்தியைப் பரப்பிவருவதாக சனிக்கிழமையன்று (மே 24) இந்தியா சாடியது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பயங்கரவாதத்துக்கான உலகளாவிய தளமாக பாகிஸ்தானை வருணித்த ஐக்கிய நாட்டு சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் பர்வதனேனி ஹரீஷ், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கும் என்றார்.
இந்த ஒப்பந்தம், 65 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டது.
நீர் என்பது உயிர் வாழ்வதற்கானது என்றும் அது போரில் பயன்படுத்தப்படும் ஆயுதம் இல்லை என்றும் பாகிஸ்தானைப் பிரதிநிதிக்கும் தூதர் ஐக்கிய நாட்டுச் சபையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைப் பற்றி அவர் பேசினார். அதற்கு திரு ஹரீஷ் பதிலளித்ததாக என்டிடிவி ஊடகம் தெரிவித்தது.
1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம், கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பஹல்காம் தாக்குதல் நடந்த மறுநாள் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதைப் புதுடெல்லி அறிந்ததால் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 40 ஆண்டுகளில் 20,000க்கும் அதிகமான இந்தியர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகிவிட்டனர் என்றும் திரு ஹரீஷ் கூறினார். அந்தக் காலகட்டத்தில் இந்தியா அசாத்தியமான பொறுமையையும் விட்டுக்கொடுக்கும் தன்மையையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமடைந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் இம்மாதம் ஏழாம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மீது சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானிலும் ஜம்மு காஷ்மீரில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் பெரிய அளவில் ஏவுகணை, வானூர்தித் தாக்குதல்களை மேற்கொண்டது. இருதரப்புக்கும் இடையே இம்மாதம் 10ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்தது.