புதுடெல்லி: இந்திய குடிமக்கள், தங்கள் குடியுரிமையைக் கைவிட்டு பிற நாடுகளில் குடியுரிமை பெற்று வருவது அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை தற்போது ஆண்டுதோறும் இரண்டு லட்சமாக பதிவாகி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் குடியுரிமையைக் கைவிட்டுள்ளதாக இந்திய அரசு, அதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குடியுரிமையைக் கைவிடும் முடிவுக்கு வருகின்றனர்.
கடந்த 2011ல் இருந்து 2021ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் குடியுரிமையைக் கைவிடுவோர் எண்ணிக்கை 1.20 லட்சமாக இருந்தது. அது வேகமாக அதிகரித்து, தற்போது 2 லட்சம் பேராக உயர்ந்துள்ளது.
இந்தியர்கள் வேறு நாட்டில் குடியேறும்போது அவர்களின் இந்தியக் கடப்பிதழ் தானாக ரத்தாகிவிடும். அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் இந்தியக் கடப்பிதழை ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 2011 முதல் 2024 வரை, ஏறக்குறைய 20 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளதாக மத்திய அரசு கூறியது.

