கொப்பல்: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இனக் கலவரத்தில் சம்பந்தப்பட்ட 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொப்பல் மாவட்ட நீதிபதி வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) அவ்வாறு தீர்ப்பளித்தார்.
2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியன்று கொப்பல் மாவட்டத்தில் உள்ள மருக்கும்பி கிராமத்தில் தலித் இனத்தவருக்கும் உயர் மட்ட இனத்தவர் என்று கூறப்படுவோருக்கும் இடையே பூசல் மூண்டது. அந்தப் பூசல் மோசமடைந்து பலர் தாக்குதலுக்கு ஆளாயினர். பல வீடுகளும் தாக்கப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்ட 101 பேரில் 98 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டது. அந்த 98 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய் (79 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட எஞ்சிய மூவர் ஒவ்வொருவருக்கும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திரையரங்கு ஒன்றில் படம் பார்ப்பதற்கான நுழைச்சீட்டுகள் தொடர்பில் 2014 ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று மூண்ட தகராறு வன்முறையைத் தூண்டியது என்று நீதிமன்ற விசாரணையின்போது கொப்பல் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அபர்னா மனோகர் பெண்டி கூறினார்.
அச்சம்பவத்தால் ஆத்திரமடைந்ததாக நம்பப்படும் உயர் மட்ட இனத்தவர் என்று கூறப்படுவோர், அன்று மாலை தலித்துகள் வசித்த குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அவர்களைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கே வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது, சொத்துகள் நாசம் செய்யப்பட்டன. அங்குள்ள மக்களுக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
“சம்பவம் நிகழ்ந்த நாளன்று மாலையில், சிறிய வாக்குவாதமாகத் தொடங்கிய பிரச்சினை பெரிய கலவரமாக உருவெடுத்து இந்த மோசமான தாக்குதலில் முடிந்தது. சம்பவத்தை நேரில் கண்ட 45 பேரை விசாரித்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு வழக்கில் இத்தனை பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்படுவது அரிதாகும்,” என்று திருவாட்டி அபர்னா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அச்சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்தது. தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. நீதி கேட்டு கர்நாடகத் தலைநகர் பெங்களூருவுக்குப் பேரணி நடத்தியதும் ஆர்ப்பாட்டங்களில் அடங்கும்.

