புதுடெல்லி: கடந்த 2020-24 காலகட்டத்தில் மும்பையின் ஜவகர்லால் நேரு துறைமுகம், குஜராத் மாநிலம், முந்த்ராவிலுள்ள அதானி துறைமுகம் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஏறக்குறைய 5,000 கிலோ போதைப்பொருள்களும் 9.42 மில்லியன் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றுள் ஹெராயின், கொக்கைன், மெத்தம்ஃபெட்டமின், ஆகியவை மட்டும் 4,963 கிலோ என்றும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10,932 கோடி (S$1.63 பில்லியன்) என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024 வரையிலான ஐந்தாண்டுகளில் மும்பை நேரு துறைமுகத்தில் ஏழுமுறையும் முந்த்ரா அதானி துறைமுகத்தில் மும்முறையும் போதைப்பொருள்கள் பிடிபட்டன. ஒட்டுமொத்தத்தில், 19 முறை துறைமுகங்கள் வழியாகப் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.பி. சுனீர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாடாளுமன்ற மேலவையில் அளித்த எழுத்துவழி பதிலில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2021 செப்டம்பர் 19ஆம் தேதி அதானி துறைமுகத்தில் ரூ.5,976 கோடி மதிப்புடைய 2,988 கிலோ ஹெராயின் சிக்கியதே ஆகப் பெரிய பறிமுதல் நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டு, வழக்கு பதியப்பட்டது; மூன்று தரகு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
அதன்பின்னர் 2022 மே 26ஆம் தேதி 52 கிலோ கொக்கைனும் அதே ஆண்டு ஜூலை 11ஆம் தேதி 75 கிலோ ஹெராயினும் அதானி துறைமுகத்தில் பிடிபட்டன.
கடந்த 2020ஆம் ஆண்டில் மும்பை நேரு துறைமுகத்தில் ஒருமுறை மட்டும் ரூ.382 கோடி மதிப்பிலான 191 கிலோ ஹெராயின் சிக்கியது. ஆனால், அதற்கு மறுஆண்டு அங்கு நான்குமுறை போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. 2021ல் மட்டும் அங்கு ரூ.8,219 கோடி மதிப்புடைய 3,610 கிலோ போதைப்பொருள்கள் சிக்கின.
ஆக அதிகமாக, 2022ஆம் ஆண்டில் ஆறு துறைமுகங்களில் மொத்தம் பத்துமுறை போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டில் குஜராத் காந்திதாம் துறைமுகத்தில் ஒருமுறையும் 2024ல் முந்த்ரா, கோல்கத்தா துறைமுகங்களில் மொத்தம் மூன்று முறையும் போதைப்பொருள்கள் பிடிபட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்த 19 சம்பவங்களில் ஐந்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது; ஆறு சம்பவங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன; ஒரு சம்பவத்தில் இன்னும் குற்றச்சாட்டு பதியப்படவில்லை. எஞ்சிய சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.