சேலம்: சேலம் மாவட்டம் பைத்தூரைச் சேர்ந்த குமரவேல், 52, என்பவர் மளிகைக்கடையில் 'சத்யம்' நிறுவன கடலை எண்ணெய் 1 லிட்டர் பாக்கெட் வாங்கி வீட்டில் பாத்திரத்தில் ஊற்றியபோது அதில் எலி இறந்து கிடந்ததைப் பார்த்து சேலம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் அது பற்றி புகார் அளித்தார்.
அதையடுத்து அதிகாரிகள் முல்லைவாடியில் உள்ள 'சத்யம்' தயாரிப்பு நிறுவனமான கணேஷ் எண்ணெய் உற்பத்தி ஆலையைச் சோதனையிட்டு 1,000 லிட்டர் கடலை எண்ணெய்யைப் பறிமுதல் செய்தனர். அங்கு எண்ணெய்த் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 'பேக்கிங்' நிறுவன உரிமையாளர் அன்பழகன், பாமாயிலுடன் கடலை எண்ணெய் கலந்து விற்றார் என்று ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. இப்போதைய புகார் உண்மை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

