நிர்மலாதேவி: சிறையிலேயே என் உயிருக்கு ஆபத்து

நிர்மலாதேவி: சிறையிலேயே என் உயிருக்கு ஆபத்து

1 mins read

சென்னை: சிறைக்குள் வைத்தே தன்னைக் கொல்ல வாய்ப்பு உள்ளதாக பேராசிரியை நிர்மலா தேவி விருதுநகர் நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளார். கல்லூரி மாணவிகளை மேலதிகாரிகளுக்கு நெருக்கம் காட்ட சொல்லி தவறான பாதையில் வழி நடத்த முற்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி நேற்று விருதுநகர் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அதேபோல, வழக்கில் சிக்கி உள்ள முருகன், கருப்பசாமி ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள். இவர்கள் மூன்று பேரிடத்திலும் 1,360 பக்க குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டது. மூவருக்கும் செப்டம்பர் 19ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. அப்போது, சிறையில் உள்ளே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலா தேவி வாய் மொழியாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதை அப்படியே எழுதி மனுவாகக் கொடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதையடுத்து ஒரு மனுவை நீதிபதியிடம் நிர்மலா தேவி தாக்கல் செய்தார். "வெளியில் இருப்பவர்களின் தூண்டுதலால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. சிறை கைதி கள், சிறை காவலர்கள் மூலமாக உயிருக்கு ஆபத்து உள்ளது. "எனவே எனக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும்," என்று நிர்மலாதேவி மனு மூல மாக கோரிக்கை விடுத்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதி இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் மேலிடத்தில் பல முக்கிய புள்ளி கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.