செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

1 mins read
Google News Preferred Icon

சென்னை: சோழப்பேரரசி செம்பியன் மாதேவியின் பஞ்சலோக சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட இந்தச் சிலையின் மதிப்பு 60 கோடி ரூபாய். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறுவையடுத்த செம்பியன் குடி கிராமத்தை சேர்ந்தவர் செம்பியன் மாதேவி. இவருக்கும், சோழ மன்னர்களில் ஒருவரான, கண்டராதித்யனுக்கும் திருமணம் நடந்தது. செம்பியன் மாதேவிக்கு 14 வயதான போது குழந்தை பிறந்தது. அதற்கு மதுராந்தகன் எனப் பெயர் சூட்டினர். பின் உத்தமசோழன் என அழைக்கப்பட்டார். செம்பியன் மாதேவி, தன் 15வது வயதில் கணவரை இழந்தார். அதன்பின் சாகும் வரையில் தீவிர சிவ பக்தையாக இருந்தார். விருத்தாசலம் உள்ளிட்ட பத்து இடங்களில் சிவன் கோயில்களைக் கட்டினார் என்பது வரலாறு. இவரது பெயரில் நாகை மாவட்டத்தில் செம்பியன் மாதேவி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கைலாசநாதர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை இருந்தது. இந்தச் சிலையை 40 ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்கள் திருடிவிட்டனர். தற்போது அது அமெரிக்க தலைநகர் வா‌ஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.