ராய்ப்பூர்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) 208 மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு, மறுவாழ்வுத் திட்டத்தில் இணைந்தனர்.
இது தண்டகாரண்யம் பகுதியில் அமைதியை மலரச் செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் வடக்கு பஸ்தர் வட்டாரத்தை நக்சல் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட பகுதியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
“இப்போதைக்குத் தெற்கு பஸ்தர் வட்டாரம் மட்டும் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக நீடிக்கிறது,” என்று அதிகாரிகள் கூறினார்.
வெள்ளிக்கிழமை சரணடைந்தோரில் 110 பேர் பெண்கள், 98 பேர் ஆண்கள். அவர்கள் 19 ஏகே-47 துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.
அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக முக்கிய முன்னேற்றங்களில் ஒன்றாக அதிகாரிகள் இதனைப் பார்க்கின்றனர். ‘நக்சல் ஒழிப்பு, மறுவாழ்வுக் கொள்கை 2025’ என்ற அரசாங்கத் திட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதை இது கோடிட்டுக்காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இத்திட்டமானது போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூகத்துடன் இணையும் வகையில் வளர்ச்சி, கலந்துரையாடல், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
முன்னதாக, கடந்த இரு நாள்களில் மட்டும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் 258 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
“வன்முறையைக் கைவிடும் அவர்களின் முடிவை வரவேற்கிறேன். சரணடைவோர் வரவேற்கப்படுவர். அதே நேரம், துப்பாக்கியை ஏந்துவோர் பாதுகாப்புப் படையினரின் முழு வலிமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.
கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்; 2,110 பேர் சரணடைந்தனர்; 1,785 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் நக்சலிசத்தை அடியோடு வேரறுக்க இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.