சென்னை: தமிழகக் காவல் துறை, தீயணைப்புத் துறைகளின் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், $21.93 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்கும் காவல் துறையின் பணித்திறனை உயர்த்தவும் தீயணைப்புத் துறையின் கட்டமைப்புகளைப் பலப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் 400 காவலர், தலைமைக் காவலர் ஆகியோருக்கான குடியிருப்புகள், சென்னைத் துறைமுகத்தில் புதிய காவல் நிலையம், சென்னை ஆவடி தமிழகச் சிறப்பு காவல் 5ஆம் அணி வளாகம், புனித தோமையர் மலை, காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகங்களில் காவலர் பல்பொருள் அங்காடிகள் ஆகியவை காவல்துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும்.
தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்காகச் சேலம் (செவ்வாய்பேட்டை), திருச்சி (சமயபுரம்), நாமக்கல் (வெப்படை), மதுரை (தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி), சிவகங்கை (சிங்கம்புணரி) பெரம்பலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் ஏழு புதிய தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன.
மேலும், கோவை (பீளமேடு, மேட்டுப்பாளையம்), நாமக்கல் (திருச்செங்கோடு) பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு வளாகங்களையும் தமிழக முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறைச் செயலர் க.மணிவாசன், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட உயர்மட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


