புதுடெல்லி: கிரிக்கெட் விளையாடியபோது தன் சகோதரருக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராற்றை விலக்கிவிடச் சென்ற 21 வயது இளையர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை (மே 12) நிகழ்ந்தது.
பலத்த உள்காயத்தால் விஷால் குமார் என்ற அந்த இளையர் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து, கொலை வழக்கு பதிவுசெய்த காவல்துறை, குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது.
கொல்லப்பட்ட விஷாலுக்கு மனைவியும் ஒரு வயதில் மகனும் உள்ளனர். அவரின் தம்பியும் தங்கையும் படித்து வருகின்றனர்.
டெல்லியிலுள்ள அழகுசாதன ஆலை ஒன்றில் விஷால் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், விஷாலின் தம்பியான குணால், கிரிக்கெட் விளையாடுவதற்காக தம் வீட்டிற்கு அருகிள்ள திடலுக்குச் சென்றார். அப்போது, அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.
இதனையடுத்து, குணால் தன் அண்ணனைத் திடலுக்கு வருமாறு அழைத்தார். விஷால் அங்கு சென்றதும் மற்றவர்கள் ஒன்றுசேர்ந்து அவரைக் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கியதாகக் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உடனே அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி, மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
இதனிடையே, குற்றவாளிகள் மூவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களைத் தேடிவருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.