புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 30) அட்சய திருதியை நாளன்று ஏறத்தாழ 21,000 திருமணங்கள் நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனால், திருமணம் சார்ந்த வணிகங்கள் மட்டும் ஒரே நாளில் ரூ.1,000 கோடிக்குமேல் வருமானம் ஈட்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்து நாட்காட்டியின்படி, வைகாசி மாசம் அமாவாசையை அடுத்து வளர்பிறை மூன்றாம் நாள் அட்சய திருதியை எனும் மங்கள நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தற்போதைய திருமணப் பருவத்தில், அட்சய திருதியை நாளில் மட்டும் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், உணவு விநியோகம், அழகு நிலையங்கள், அலங்கார நிலையங்கள், இசைக்கச்சேரிகள் போன்ற தொழில்புரிவோர் பெரும்பலன் அடைந்ததாக வணிக, தொழில்துறை (சிடிஐ) தெரிவித்தது.
“மிகுந்த தேவை காரணமாகத் திருமண மண்டபங்களிலும் ஹோட்டல்களிலும் வாடகை 10 முதல் 15 விழுக்காடு உயர்த்தப்பட்டுவிட்டது,” என்று சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறினார்.
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வணிகம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு நடந்திருக்கும் என்று சிடிஐ பொதுச் செயலாளரும் தங்க வணிகருமான குர்மீத் அரோரா தெரிவித்தார்.
தங்க விலை உச்சத்தில் இருப்பதால் எடை குறைவான நகைகளை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சொன்னார்.
“தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. பத்து கிராம் தங்கம் தற்போது ஏறக்குறைய 97,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளன்று அது 73,500 ரூபாயாக இருந்தது. அதனால், வாடிக்கையாளர்களின் தேவைகளை ஈடுசெய்ய சிறிய, எடைகுறைந்த தங்க, வைர நகைகளில் வணிகர்கள் கவனம் செலுத்துகின்றனர்,” என்று திரு குர்மீத் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
திருமணச் செலவில் 10 விழுக்காட்டை ஆடைகளுக்கும், 15 விழுக்காட்டை நகைகளுக்கும், 5 விழுக்காட்டை மின்னணுக் கருவிகள், இனிப்புகள், உலர்பழங்கள் ஆகியவற்றுக்கும் குடும்பங்கள் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுப் பொருள்களுக்கு மட்டும் 4 விழுக்காட்டுத் தொகையைச் செலவிடுவதாக சிடிஐ மூத்த துணைத் தலைவர் தீபக் கார் கூறினார்.