தமிழ்நாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் தலை எழுத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற இந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை ஜூன் மாதம் முடிவடைந்து இருவிதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து புதிய தீர்ப்பு வழங்கும் பொறுப்பு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணனிடம் வழங்கப்பட்டது. அவர் வழக்கு விசாரணையை முடித்துவிட்ட நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம் என்று வெளியான தகவல்களைத் தொடர்ந்து தினகரன் தரப்பினர் 18 எம்எல்ஏக்களையும் பத்திரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தற்போது குற்றாலத்தில் உள்ளனர். பழைய குற்றாலத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் நேற்று ஐந்தருவி சாலையில் உள்ள வேறொரு ஹோட்டலுக்கு மாறினர். அந்த 18 பேலைரயும் அதிமுக பிரமுகர்களோ அரசாங்க அதிகாரிகளோ தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு உள்ளன. முன்னதாக, நல்ல தீர்ப்பு வரவேண்டும் என வேண்டி இசக்கி சுப்பையாவின் வீட்டில் நடைபெற்ற யாகத்தில் 18 பேரும் கலந்துகொண்டனர். "18 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டால் அவர்கள் அனைவரும் பதவி இழந்துவிடுவர். அதன் பின்னர் சட்டமன்றத்தில் உறுப்பினர் 214ஆகக் குறையும். 109 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி தொடரும்.
மாறாக, தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வெளியானால் 18 பேரும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிவிடுவர். அப்போது பெரும்பான்மைக்கு தேவைப் படும் 117 உறுப்பினர் ஆதரவு இல்லாமல் ஆட்சி கவிழும்," என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தபோதிலும் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கேட்டு தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. அதனைக் கவனத்தில் கொண்டு கருத்து தெரிவித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசுக்கு ஆபத்து இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் தினகரன் தரப்பைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் வேறுமாதிரியாகக் கூறுகிறார். "நாங் கள் கோட்டையைப் பிடிக்கும் வகையில் தீர்ப்பு வரும். கூவாத்தூரில் இருந்தோம். இப்போது குற்றாலத்தில் உள்ளோம். அடுத்து கோட்டைக்குச் செல்வோம்," என்றார் அவர்.

