சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு முக்கிய இடங்களில் கூட்ட நெரிசலைக் கண்காணிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய போலிஸ் படையினர் கூடுதலாகப் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. ஒவ்வொரு நடைமேடையிலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் இதைப் பயன்படுத்தி திருடர்களும் உள்ளே புகுந்து கைவரிசை காட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கண்காணிப்பு புகைப்படக் கருவி மூலம் போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரயில் நிலையங்களுக்கு வரும் மக்கள்தொகையைக் கணக்கெடுக்கையில் அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலிசின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு ரயில்வே போலிஸ் அதிகாரிகளும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளும் இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். தீபாவளிக் கூட்டம் இருக்கும்வரை மத்திய போலிஸ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

