ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, அறக்கட்டளையின் கீழ் இயங்கி வந்த 215 பள்ளிகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
அந்தப் பள்ளிகளில் மொத்தம் 51,000 மாணவர்கள் படிக்கின்றனர். இதற்கான உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) பிறப்பிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ‘ஜமாத் -இ-இஸ்லாமி’யின் கீழ் 215 பள்ளிகள் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வரும் நாள்களில் சேரவுள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி அப்பள்ளிகள் மாவட்ட நீதிபதி பொறுப்பின் கீழ் செயல்படும் என்றும் பத்து மாவட்டங்களில் உள்ள 215 பள்ளிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், காவல்துறையின் உதவியுடன் இக்குறிப்பிட்ட பள்ளிகளில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீர் அரசு, தனது சொந்த மக்களுக்கு எதிராக, பாஜக கொள்கைகளைப் பின்பற்றுவது துரதிர்ஷ்டவசமானது என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.
மக்கள் மாநாட்டுக் கட்சி, அப்னி கட்சி ஆகியவையும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
எனினும், அரசு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நடவடிக்கையை வரவேற்பதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

