தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் வேகமாகப் பரவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் நான்கு கற்சிலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றுடன் இரண்டடி உயரமுள்ள பித்தளை வேல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
இச்சிலைகள் ரங்கநாதபுரத்தில் உள்ள அம்மன் கோயிலில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்தவை என விசாரணையில் தெரியவந்தது. அக்கோயிலில் மொத்தம் 21 கற்சிலைகள் இருந்ததாகவும் அவற்றுள் தற்போது 14 சிலைகள் மட்டுமே இருப்பதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள ஏழு சிலைகள் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். படம்: தமிழக ஊடகம்

