மேற்குவங்கப் பெயரை 'பங்களா' என்று மாற்ற மத்திய அரசு தாமதம் செய்கிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில் "மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரியத்துக்கு ஏற்ப 'பங்களா' என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 26ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிறுவனங்களின் பெயர்களை பாஜக தனது விருப்பத்துக்கேற்ப பெரும்பாலும் தினமும் மாற்றிவருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்களா' என்று மாற்றம் செய்வதற்குச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு தாமதித்து வருகிறது. சட்டப்பேரவை தீர்மானத்துக்கும் மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்," என்று மம்தா குற்றம் சாட்டினார்.

