கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் 22 நக்சலைட்டுகள் காவல்துறையில் சரணமடைந்தனர்.
சரணடைந்த அவர்கள், தங்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒடிசா காவல்துறைத் தலைவர் யோகேஷ் பகதூர் குரானியா முன்னிலையில் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுபற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஜனநாயக நடைமுறை மீது நம்பிக்கை கொண்டு, நாட்டின் இயல்பு வாழ்க்கையில் இணைய முடிவெடுத்துள்ளனர். இனி நக்சலைட்டுகளுடனான தொடர்புகளைத் துண்டித்து விடுவோம் என்றும் உறுதி அளித்து உள்ளனர் என தெரிவித்தனர்.
இதேபோன்று, 150 வெடிக்கத் தயாராகவுள்ள தோட்டாக்கள், 20 கிலோ வெடிபொருள்கள், 13 சக்தி வாய்ந்த வெடிபொருள்கள், ஜெலாட்டின் குச்சிகள், மாவோயிஸ் புத்தகங்கள் மற்றும் பிற பொருள்கள் ஆகியவற்றை அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சரணடைந்தவர்களுக்கு ரூ.1.84 கோடி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. மேலும், அவர்களுக்கு இடைக்கால உதவித் தொகையாகத் தலா ரூ.25,000 வழங்கப்பட்டது.
சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு அனைத்து நலன்களும் உடனடியாகக் கிடைக்கும் என்றும், அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கண்ணியத்துடன் மீண்டும் வாழ அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஒடிசா காவல்துறை உறுதியளித்துள்ளது.

