நாகை: கன மழை நீடித்து வருவதால் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப் பட்டது. தமிழகத்தில் தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 2 தினங்களாக இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒரே இடத்தில் நிலைகொண்டு இருப்பதால் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. நேற்று காலையும் மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்ததாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலையால் நாகை, புதுக் கோட்டை, காரைக்கால் மாவட்டங் களில் நேற்று முன்தினம் மழை வெளுத்துக் கட்டியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இம் மூன்று மாவட்டங்களிலும் பள்ளி களுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். கனமழை காரணமாக இம் மாவட்டங்களில் கஜா புயலை அடுத்த நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் தற்போது நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றும் மழை பெய்ததால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, வேளாங்கண்ணி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மூன்று மாவட்டங்களிலும் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

