புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 225 பேர்மீது குற்றவியல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போதைய எம்.பி.க்களின் வேட்புமனுக்களை ஆய்வுசெய்ததில் இவ்விவரம் தெரியவந்துள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இப்போதைய 514 எம்.பி.க்களில் 225 பேர்மீது, அதாவது 44 விழுக்காட்டினர்மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவர்களில் 29 விழுக்காட்டினர்மீது கொலை, கொலை முயற்சி, இனக் கலவரத்தை தூண்டியது, கடத்தல் எனக் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. ஒன்பது பேர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கும் எம்.பி.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உத்தரப் பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களில் பலரும் கோடீசுவரர்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களில் சிலருக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் இருக்கின்றன.

