கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு இந்திய உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 9) உத்தரவிட்டது.
மேலும், பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் படங்களை, சமூக ஊடகங்களிலிருந்து அகற்றுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதோடு, கோல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல் பதவி விலக முன்வந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற சில ஊடகங்களில் தகவல் வெளியானது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயதுப் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் விளைவாக 23 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 9) முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோல்கத்தாவில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நிகழ்ந்த பெண் மருத்துவர் கொலை தொடர்பில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில அரசு சார்பில் முன்னிலையான திரு கபில் சிபல், விசாரணை தொடர்பான அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பெண் மருத்துவர் கொலை தொடர்பில் நீதி கோரி இளம் மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இவ்வழக்கை கோல்கத்தா உயர் நீதிமன்றம் மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைத்தது. சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதமாகிவிட்ட நிலையில், இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து சான்றுகள் எதுவும் கிடைக்காதது விசாரணைக்குத் தடையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதனால் வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லை என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண் மருத்துவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதற்கு மறுநாள், அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று, கருத்தரங்க அரங்கை ஒட்டியிருந்த கழிவறையை இடிக்கச் சொல்லி அம்மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ் உத்தரவிட்டதாக சிபிஐ தெரிவித்தது.