திருமண நிகழ்வில் நடனமாடிய 23 வயது பெண் சுருண்டுவிழுந்து உயிரிழந்தார்

1 mins read
68155cef-9cfe-444b-8a8f-904bd295ec3d
திருமண நிகழ்ச்சியின்போது நடனமாடிக்கொண்டிருந்த 23 வயது பரிணிதா மாரடைப்பால் உயிரிழந்தார். - படம்: என்டிடிவி

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியின்போது நடனமாடிக்கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவர், இந்தூரில் வசித்து வந்த எம்பிஏ பட்டதாரியான பரிணிதா ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விதிஷா மாவட்டத்துக்கு வந்திருந்தார்.

200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட ‘ஹல்தி’ விழாவில் பரிணிதா மேடையில் நடனமாடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

‘லெஹ்ரா கே பால்கா கே’ என்ற பாலிவுட் பாடலுக்குப் பரிணிதா நடனமாடிக்கொண்டிருந்தபோது, ​​சனிக்கிழமை இரவு மேடையில் அவர் திடீரென சரிந்து விழுந்தார்.

விழாவில் கலந்துகொண்ட மருத்துவர்களான குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு ‘சிபிஆர்’ எனப்படும் முதலுதவி சிகிச்சையை அளித்தனர். இருப்பினும், சிகிச்சையால் பலனில்லை.

அதிகாரபூர்வ தகவல்களின்படி, பரிணிதாவின் இளைய சகோதரர்களில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், மத்தியப் பிரதேசத்தில் இசைக்கு நடனமாடியவர்கள் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகர்-மால்வா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தான்.

இதேபோல், இங்குள்ள இந்தூரில் யோகா நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடியபோது 73 வயது முதியவர் ஒருவரும் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்