புதுடெல்லி: அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், குஜராத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, தனது சமூக ஊடகப் பக்கங்களின் நிர்வாகப் பொறுப்பை, தேர்வு செய்யப்பட்ட பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார்.
அன்றைய தினம் பிரதமர் அலுவலகம் வெளியிடும் தகவல்களை இந்தப் பெண்கள் குழு அவரது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களை கௌரவிக்கும் வகையில், மகளிர் தினத்தன்று, குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணி முழுவதுமாக பெண் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.