புதுடெல்லி: துணை ராணுவப் படையில் இருந்து கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 23,000 பேரும் எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து அதிகமானோரும் வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் யூசுப் பதான் எழுப்பிய ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய உள்துறை அமைச்சு இத்தகவலை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2025 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் துணை ராணுவப்படைகளில் இருந்து 23,360 பேர் விலகி இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. மேலும் ஆக அதிகமாக பிஎஸ்எப் எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7,493 பேர் பணியில் இருந்து விலகி உள்ளனர்.
ஆகக் குறைவாக அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த 371 பேர் பணியில் இருந்து விலகி உள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு மட்டும் 3,077 பேர் ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக 2020ஆம் ஆண்டு 959 வீரர்கள் விலகி உள்ளனர்.
இன்ஸ்டகிராமுக்கு அனுமதி
இதனிடையே இந்திய ராணுவ வீரர்களும் இனிமேல் இன்ஸ்டகிராம் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ராணுவ ரகசியங்கள் கசிந்து விடக்கூடாது என்பதற்காக ராணுவ வீரர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. முன்பு எக்ஸ் சமூக ஊடகத்தில் மட்டும் இந்திய ராணுவ வீரர்கள் கணக்கு வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் கருத்துகளைப் பகிரவோ, ஆதரிக்கவோ, ‘லைக்’ செய்யவோ அனுமதி கிடையாது. இந்நிலையில் அதே விதிமுறைகளுடன் புகைப்படங்கள், காணொளிகளை பகிரும் இன்ஸ்டகிராம் தரப்பில் கணக்குகள் எழுதவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் உள்நாட்டிலும், உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை ராணுவ வீரர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கவனக்குறைவாகக்கூட ராணுவம் சார்ந்த தகவல்கள் கசிந்து விடக்கூடாது என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

