கோல்கத்தா: தனியார் குழுமம் ஒன்று சுமார் ரூ. 2,434 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கி சார்பாக, இந்திய ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கப்பட்டது.
எஸ்ஆர்இஐ குழுமத்தின் முன்னாள் உரிமையாளர்கள் மோசடிதாரர்களாக வகைப்படுத்த வேண்டும் என அந்தப் பொதுத்துறை வங்கியானது தனது புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த எஸ்ஆர்இஐ குழும நிறுவனங்களின் பழைய நிர்வாகத்தைக் கலைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்த நிறுவனம் பல்வேறு வங்கிகளிடம் பெற்ற ரூ. 32,700 கோடி கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என அறிவித்தது. இதனால் அக்குழுமத்தின் மீது திவால் நடவடிக்கையைத் தொடங்கியது ரிசர்வ் வங்கி.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட அறிக்கையில், அந்த வங்கியில் எஸ்ஆர்இஐ குழுமத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் மொத்தமாக ரூ. 2,434 கோடி கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

