புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1981ஆம் ஆண்டு கொள்ளைக் கும்பலால் ஒரு கிராமத்தில் 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த வழக்கில் 44 ஆண்டுகள் கழித்து மூன்று பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள திஹுலி கிராமத்தில் சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பல் நுழைந்தது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 24 தலித் மக்களை இரக்கமின்றிக் கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சுட்டுக்கொன்றதுடன் அவர்களுடைய பொருள்களையும் அந்தக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் அப்போது புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ், ராதே உட்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.
மீதமுள்ள நால்வரில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர்களுக்கு மார்ச் 18ஆம் தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைப்பயணம் மேற்கொண்டார்.