24 மணி நேரத்தில் 29 கிலோமீட்டர் சாலை: இந்தியா உலக சாதனை

2 mins read
aca98241-8cb0-4029-9155-326c4e0aabcc
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, கர்நாடகாவின் பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 624 கிலோமீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. - படம்: ஏபிபி

அமராவதி: இருபத்து நான்கு மணி நேரத்தில் 29 கிலோமீட்டர் சாலை அமைத்து, இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, கர்நாடகாவின் பெங்களூரு நகரங்களை இணைக்கும் வகையில் 624 கிலோமீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

கடப்பா வழியாக செல்லும் இந்த அதிவேக விரைவு ஆறு வழிச்சாலை ஆந்திராவில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் ரூ.19,320 கோடி செலவில் இந்தச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள பணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதிகாரிகளால் மேற்பார்வையிடப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திராவின் சத்யசாய் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 28.95 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 10,675 மெட்ரிக் டன் நிலக்கீல் கான்கிரீட்டைத் தொடர்ந்து பயன்படுத்தி உள்ளனர். இது கின்னஸ் சாதனை ஆகும்.

நிலக்கீல் கான்கிரீட் சாலை என்பது மென்மையான, வசதியான பயண அனுபவத்தைத் தரக்கூடியது. சாலை கட்டுமானப் பணியில் இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்தப் பணி உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதேபோல் வானவோலு - ஓடுலப்பள்ளி இடையே 42 கிலோமீட்டர் தூரத்துக்கு இருவழி நிலக்கீல் கான்கிரீட் சாலையை அமைப்பதன் மூலம் மேலும் இரண்டு உலக சாதனைகளைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது இந்தியாவின் பெருமைக்குரிய தருணம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்