காஷ்மீரில் 25 நூல்களுக்குத் தடை

1 mins read
77a00ac3-ab9f-4a88-a826-be4ea8cce4ad
காஷ்மீர் குறித்து பொய்யானவற்றை எடுத்துரைப்பதாkaவும் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும் கூறி, அந்த 25 நூல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. - மாதிரிப்படம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: புக்கர் பரிசு வெற்றியாளர் அருந்ததி ராய் எழுதிய நூல் உட்பட 25 நூல்களுக்கு இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள அம்மாநிலத்தில் ‘பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாக’ கூறி அந்நூல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் குறித்து பொய்யானவற்றை எடுத்துரைத்துள்ளதாக அந்நூல்களின் ஆசிரியர்களை அரசாணை குறைகூறியுள்ளது. அந்நூல்கள் இளையர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும், பயங்கரவாதத்தைப் புகழ்வதாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் உள்ளன என்றும் அது சாடியுள்ளது.

அந்நூல்களுக்கு எதிரான தடையாணை இம்மாதம் 5ஆம் தேதி வெளியானது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

“ஆதிக்க மனப்பான்மையுடன் கூடிய இத்தகைய நடவடிக்கைகள், அதற்குப் பின்னால் உள்ளவர்களின் பாதுகாப்பின்மையையும் புரிதலின்மையையும் காட்டுகின்றன,” என்று தலைமைச் சமயகுருவும் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவருமான மிர்வைஸ் உமர் ஃபரூக் தெரிவித்துள்ளார்.

கல்விமான்கள் மற்றும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களின் நூல்களைத் தடைசெய்வதன்மூலம் வரலாற்று உண்மைகளையும் காஷ்மீர் மக்களின் நினைவுத்தொகுப்புகளையும் அழித்துவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தடையாணை பேச்சு, கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று வரலாற்று ஆசிரியர் சித்திக் வஹீத் தெரிவித்திருக்கிறார்.

எழுத்தாளர் அருந்ததி ராயுடன் அரசியலமைப்புச் சட்ட வல்லுநர் ஏ.ஜி. நூரானி, அரசியல் அறிவியல் பேராசிரியர் சுமந்த்ரா போஸ் உள்ளிட்டோரின் நூல்கள் தடைசெய்யப்பட்ட நூல்களில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்