தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முகமூடி அணியாமல் பட்டப்பகலில் நகைக்கடையில் ரூ.25 கோடி நகை கொள்ளை

2 mins read
a7fdbd48-1f63-4426-8ee5-47419893259a
நகைக்கடையைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் முகமூடி அணியவில்லை. அவர்களின் முகங்கள் கண்காணிப்புக் கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருந்தன.  - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரின் அர்ரா நகரில் உள்ள ‘தனி‌ஷ்க்’ நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நான்கு நபர்களைக் காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது.

திங்கட்கிழமை (மார்ச் 10) காலை 10.15 மணிவாக்கில் இரண்டு மர்ம நபர்கள் அந்த நகைக் கடைக்கு வந்தனர்.

வாசலில் நின்றிருந்த காவலர்களிடம், மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டனர். அந்த நேரத்தில் மேலும் நான்கு மர்ம நபர்கள் கைத்துப்பாக்கியுடன் நகைக்கடைக்குள் நுழைந்தனர்.

நகைக்கடையின் கதவை மூடிய மர்ம நபர்கள், கடையின் ஊழியர்களிடம் இருந்து கைப்பேசிகளைப் பறித்தனர். பின்னர் அவர்களைத் தனி அறையில் வைத்துப் பூட்டினர்.

சுமார் 22 நிமிடங்கள் கடையின் இரு தளங்களில் இருந்த நகைகளைப் பெரிய பைகளில் நிரப்பிக் கொண்டு காலை 10.50 மணிக்கு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

நகைக்கடையைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் முகமூடி அணியவில்லை. அவர்களின் முகங்கள் கண்காணிப்புக் கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருந்தன.

கொள்ளையர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இந்தச் சூழலில் பீகாரின் பதாரா காவல் நிலைய எல்லைப் பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஆறு பேர் தப்பிச் செல்வது குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அவர்களைக் காவல்துறையினர் வாகனங்களில் விரட்டி சென்றனர். அப்போது அதிகாரிகளை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்குக் காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் இருவர் காயமடைந்து மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றிலிருந்து ஏராளமான தங்க நகைகள் மீட்கப்பட்டன. தப்பியோடிய நால்வரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதிகாரிகள் சுட்டதில் இருவருக்கும் காலில் குண்டுக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 10 துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

குறிப்புச் சொற்கள்