சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள 25 கிலோ உயர்தரக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையச் சுங்கத்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வியட்னாம் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.
வியட்னாம் தலைநகர் ஹனோயிலிருந்து கோலாலம்பூர் வழியாகச் சென்னை வந்த விமானத்தில், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, உணவுப் பொருள் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 15 கிலோ உயர்தர ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் கஞ்சாவைப் பெற்றுச் செல்ல வந்தவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அதேபோல், தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 2 இளைஞர்களின் உடைமைகளைச் சோதனையிட்டனர்.
அவர்களிடமிருந்த உணவுப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும், அதிகப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ‘கடத்தல் குருவிகளாக’ச் செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் ரூ.25 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

